சென்ற வார இறுதியில் அல்லது இந்த வார தொடக்கதிலேயே பதிவு எழுதியிருக்க வேண்டியது. சில காரணங்களுக்காக இன்று பதிவு எழுதும்படி நேர்ந்துவிட்டது.
காரணம், இடப்பிரச்னைதான். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, பதிவர்களுக்காக பதிவர்களே நடத்தும் அல்லது திரையிடும் அல்லது ரசிக்கும் உலக சினிமா காண்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு வெற்றிகரமாக சென்றமாதம் முதல் படத்தையும் நாம் அனைவரும் ரசித்தாயிற்று.
ஆனால், ஜூலை மாதத்துக்கான படத் தேர்வில் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, விழுந்தது அடி. அதுதான் திரையிடலுக்கான இடம்.
தேர்வு செய்து வைத்திருந்த ஹால், சில எதிர்பாராத சிக்கலால் கிடைக்கவில்லை. என்ன செய்யலாம் என பல அரங்குகளை அணுகி, செலவு கையைக் கடித்து அல்லது இடம் கிடைக்காமல் போய், திண்டாடி, இறுதியில் கிழக்குப் பதிப்பக மொட்டை மாடியிலேயே திரையிடலாம் என்ற முடிவுக்கு வருவதற்குள் நாட்கள் நகர்ந்துவிட்டன.
சென்ற மாதமே பதிவர்கள் மத்தியில் கிழக்குப்பதிப்பகத்துடன் இணைந்து திரைப்படம் திரையிடுவது குறித்த உரையாடல் நிகழ்ந்தது. இந்த சூழலில் இந்த மாதம் அதே கிழக்குப் பதிப்பக மொட்டை மாடியிலேயே தவிர்க்க இயலாதநிலையில் படம் திரையிடப்படுகிறது.
நான்குப்புறமும் துணிகள் கட்டி, படத்தை திரையிட்டு பார்த்து, அப்பாடா... ரசிப்பதில் பிரச்னையில்லை என்று தெரிந்த பிறகே இந்த அறிவிப்பு வெளியாகிறது.
இந்த காலதாமத்துக்காகவும், மொட்டை மாடியில் திரையிடல் நடப்பதற்காகவும், நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.
திரையிடலுக்கான இடத்தையும், புரொஜக்டரையும் இலவசமாக கொடுத்து உதவி செய்யும் பதிவர் பத்ரிக்கு, பதிவுலக நண்பர்கள் சார்பில் நன்றி.
வாய்ப்பும், நேரமும் இருக்கும் அனைத்து பதிவர்களும், பதிவுகளை வாசிப்பவர்களும், தங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் வரும்படி அன்புடன் அழைக்கிறோம். இது நமக்காக, நாமே நடத்தும் விழா.
படத்தின் பெயர்: Rabbit Proof Fence
நாடு : ஆஸ்திரேலியா
இயக்குநர் : ஃபிலிப் நாய்ஸ்
நாள் : ஜூலை 5ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : சரியாக மாலை 5.30 மணி
இடம் : கிழக்குப்பதிப்பகம், எல்டாம்ஸ் ரோடு, சென்னை
இந்தப் படம் குறித்த ஒரு அறிமுகம்:
சாதாரணமான சம்பவங்களில் அசாதாரணமான நிகழ்ச்சிகளை புகுத்துவதே ஒரு நல்ல திரைக்கதைக்கு அழகு. எங்கோ, எப்போதோ, யார் சொன்னதாகவோ படித்த நினைவு. கமர்ஷியலாக வெற்றி பெற்ற படங்களாகட்டும், நம் மனதை பாதித்த செல்லூலாயிட் கவிதையாகட்டும் அனைத்தின் உள்ளார்ந்த விஷயமாக இந்த சரடு இருப்பதை யோசித்துப் பார்த்தால் உணர முடியும்.
இப்படியான அசாதாரணமான நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் ‘ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்’. அரசாங்கத்தால் கடத்தப்பட்ட மூன்று சிறுமிகள் ஓரிடத்தில் அடைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பித்து, 9 வாரங்கள், 1500 மைல் தொலைவை கால்நடையாகவே கடந்து தங்கள் வீட்டை அடைகிறார்கள். வழியில் ஒரு சிறுமி அரசாங்க காவலரிடம் பிடிபட்டு விடுகிறாள். எஞ்சிய இருவரும் எப்படி தங்கள் தாயுடன் சேருகிறார்கள் என்பதுதான் கதை. அரசாங்கத்தால் குழந்தைகள் கடத்தப்பட்டது ஆஸ்திரேலியாவில் சாதாரணமான சம்பவம். ஆனால், 1500 மைல் தொலைவை நடந்தே மூன்று குழந்தைகள் கடந்ததும், தங்கள் தாயுடன் இணைந்ததும் அசாதாரணமான நிகழ்வு.
அதுசரி, அரசாங்கம் குழந்தைகளை ஏன் கடத்த வேண்டும்? அல்லது தாயிடமிருந்து ஏன் பிரிக்க வேண்டும்? வேறு வழியில்லை. சில வாக்கியங்களிலாவது ஆஸ்திரேலியாவின் வரலாற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். அப்போதுதான் ‘ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்’ படத்தின் ஆணிவேர் புரியும்.
ஆஸ்திரேலிய கண்டம் அல்லது நாட்டை ஆங்கிலேயர்கள் ஆக்ரமித்தது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான். அதற்கு முன்பிருந்தே அந்த நாட்டில் வசித்தவர்கள் கறுப்பின மக்கள். அதாவது பூர்வ குடிகள். ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் ஆஸ்திரேலியா வருவதற்குள் கலப்பின குழந்தைகள் (ஆங்கில & கறுப்பர்களின் குழந்தைகள்) அதிகரித்துவிட்டார்கள். இப்படி ‘இரண்டுங்கெட்டானாக’ திரிந்த குழந்தைகளுக்கு ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை சொல்லித்தந்து (புகுத்தி?) அவர்களை ஆங்கிலேயர்களாக, ஆங்கிலேயர்களின் வீட்டு வேலைக்காரர்களாக மாற்றும் வேலையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் இறங்கியது. இப்படி பெருகிய தலைமுறையை ‘ஸ்டோலன் ஜெனரேஷன்’ என இன்றும் அழைக்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலாச்சார மாற்று நிகழ்வு 1900ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை சட்டத்தின் துணையுடன் நடந்தது. இந்த 71 ஆண்டுக் கால வரலாற்றில் 1931ம் ஆண்டு நடந்த சம்பவமே ‘ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்’ திரைப்படம்.
2002ம் ஆண்டு வெளியான இந்தப் படம், ஆங்கிலத்தில் தயாரான ஆஸ்திரேலிய படம். ஒரு வகையில் இது அரசியல் படம். மறு வகையில் இது உணர்ச்சிகளின் காவியம். இன்னொரு வகையில் இது காமிராவின் கவிதை. ஆனால், நிஜத்தில் இது உண்மைக்கதை. அதனால்தான் மனதை சுடுகிறது.1999ம் ஆண்டு ‘ஃபாலோ தி ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்’ என்ற நாவல் வெளியானது. உலகளவில் இலக்கிய அந்தஸ்தும் பெற்றது. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் மோலி என்னும் 14 வயது சிறுமி. வழக்கம்போல் ஆங்கிலேயர்கள் குழந்தைகளை 1931ம் ஆண்டில் ஒருநாள் வலுகட்டாயமாக அழைத்து செல்கிறார்கள். அதில் மோலி, அவளது தங்கை, உறவுக்கார சிறுமி ஆகிய மூவரும் அடக்கம். மோலியின் தலைமையில் மற்ற இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள், தங்கள் கிராமத்தை அடைகிறார்கள், இடையில் உறவுக்கார சிறுமி எப்படி பிடிபடுகிறாள் என்பதை உணர்ச்சியுடன் இந்த நாவல் விவரித்தது. இதில் முக்கியமான விஷயம் இந்த நாவலை எழுதியது மோலியின் மகள். பெயர் டோரிஸ் பில்கிங்டன்.
படத்தின் இறுதியில் டைட்டில் கார்டு ஓடும்போது உண்மையான மோலியும், அவளது தங்கையும் கைத்தடியை ஊன்றியபடி நடந்து வருகிறார்கள். அவர்களது பிம்பங்களின் மீது எழுத்து நகர்கிறது. அதுவரையில் இது ஏதோ சினிமாவுக்கான கதை என நினைத்துக் கொண்டிருந்த நமக்கு இது உண்மைக்கதை என புரியும் தருணம் அதுதான். அது மட்டுமேதான். இறுதிவரை இந்த உண்மையை இயக்குனர் சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார். அதனாலேயே நம் மனதில் ஏற்படும் இனம் புரியாத சோகம் நம்மை விட்டு நீண்ட நாட்களுக்கு அகல மறுக்கிறது.
ஃபிலிப் நாய்ஸ் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். நிலக்காட்சிகளை ஒவ்வொரு காட்சியின் தொடக்கத்திலும் லாங் ஷாட், மிட் ஷாட்டில் காட்டிய பிறகே அந்தக்காட்சிக்குள் நுழைவார். ஒருவகையில் இதையே நாய்ஸின் ஸ்டைலாக சொல்லலாம். காட்சிக்கான கனம் இப்படி சூழலை விவரிப்பதில்தான் இருக்கிறது என்பதை நுணுக்கமாக புரிந்து கொண்ட கலைஞன். ‘பேட்ரியாட் கேம்ஸ்’, ‘தி போன் கலெக்டர்’ போன்ற முந்தைய படங்களில் இந்த வித்தையை நாய்ஸ் கையாண்டிருக்கிறார். ஆனால், இந்த ‘ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்’ திரைப்படத்தில்தான் அது அழுத்தமாக பதிந்திருக்கிறது.
ப்ளாஷ் பேக் இல்லாத நேர் கோட்டில் இந்தப் படம் நகர்கிறது. கொஞ்சம் பிசகினாலும் சென்டிமெண்ட் படமாகிவிடும் அபாயம். எனவே குழந்தைகளின் பயணத்தையும் அவர்களை கண்டு பிடிக்க ஆங்கிலேய அதிகாரி மேற்கொள்ளும் முயற்சியையும் துல்லியமாக மாறி, மாறி காட்டி பார்வையாளர்களின் கவனம் சிதறாதபடி இயக்கியிருக்கிறார். காட்சிகளின் நகர்வில் வேகம் இருக்கிறது. ஆனால், படம் முழுவதும் இழையோடும் புலம் பெயர்ந்தவர்களின் சோகம் நம்மையும் அறியாமல் அழ வைக்கிறது. புலம் பெயர்ந்தவர்களால் மட்டுமே உணரக் கூடிய அந்த சோகத்தை, அவலத்தை கொஞ்சமாவது மற்றவர்களையும் உணரச் செய்ததை பெரிய விஷயமாக கருதுகிறேன்.
ஜீப்பில் வலுக்கட்டாயமாக குழந்தைகள் ஏற்றப்படும்போது மோலியின் தங்கை கதவின் கண்ணாடியில் முகம் பொத்தி அழ, ஏக்கம் கலந்த வெறித்த பார்வையுடன் மோலி தன் அம்மாவை பார்க்கும் காட்சி... தப்பித்து வரும் மூவரில், உறவுக்கார பெண் பிடிபட்டு இழுத்து செல்லப்படும்போது அவள் மோலியை பரட்டை தலையுடன் பார்க்கும் இடம்...ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என நிர்பந்திக்கப்படும்போது மூவரும் பரிதாபமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் காட்சி...
என படம் நெடுக கண்கள் நடித்திருக்கின்றன. ஒரு நடிகனுக்கு அல்லது நடிகைக்கு கண்கள் எவ்வளவு அவசியம், வார்த்தைகள் விவரிக்க முடியாத சோகத்தை கருவிழிகள் எப்படி விவரிக்கும்... என்பதற்கு இந்தப் படம் ஒரு பாடம். அகத்தின் உணர்ச்சிகள் கண்களில்தானே தெரியும்?
படம் நெடுக தவிப்பு இருக்கிறது. கலாச்சாரங்கள் மாறினால் என்ன? நாகரீகம் வளர்ந்தால் என்ன? மனிதனின் அடிப்படை தவிப்புகள் ஒன்றுதானே? தன்னிடமிருந்து குழந்தை பறிக்கப்படும்போது அந்தத்தாய் கல்லால் தன் நெற்றியில் அடித்துக் கொண்டு அழுகிறாள். பூர்வகுடி தாயார்தான். ஆனால், நாகரீகம் தெரிந்த நம் அம்மா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இருவருக்குள்ளும் இருக்கும் தவிப்பை விவரிக்க மொழி அவசியமா?
ஒரே இலக்கை நோக்கித்தான் மூன்று குழந்தைகளும் பயணப்படுகிறார்கள். அம்மாவை பார்க்கவேண்டும். அம்மாவுடனேயே தங்க வேண்டும். ஆனால், இறுதியில் இருவர்தான் இலக்கை எட்டுகிறார்கள். நம் பயணங்களும் அப்படித்தானே அமைகிறது. ஒரே இலக்கை நோக்கி நகரும் நண்பர்கள் இறுதியில் ஒன்றாகவா அடைகிறார்கள்? வாழ்க்கையின் நதியில் அடித்து செல்லப்படும்போது கடலில் சங்கமிக்கும் பாக்கியம் சிலருக்குத்தானே கிடைக்கிறது.
பெரியவர்களே இல்லாத உலகில் குழந்தைகள் யாரை நம்புவார்கள்? தங்களைத் தவிர வேறு யாருமே தங்களை காப்பாற்ற மாட்டார்கள் என ஒரு மனிதன் உணர்வது வாழ்க்கையில் அவனை உயர்த்தும். ஆனால், குழந்தைகள் அந்த நிலைக்கு தள்ளப்படுவது எவ்வளவு பெரிய சோகம்? மழலையின் சந்தோஷம் துடைக்கப்பட்டு பயமும் எச்சரிக்கையும் அந்த இடத்தை நிரப்பும் தருணத்தை வாழ்க்கையின் மிகப் பெரிய வன்முறை என்றுத்தானே சொல்லமுடியும்?
உலகெங்கும் கேட்கப்படாமலேயே அப்பத்தாக்களின் கதைகள் உலவிக் கொண்டிருக்கின்றன. அம்மாவின் தவிப்பு தீர்க்கப்படாமலேயே அலைந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளின் நம்பிக்கைகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. சூரியனும் உதிக்கிறான், மறைகிறான். எதையும் பார்க்காமல், உணராமல், தீர்க்காமல் நாமும் தேனீர் அருந்திக் கொண்டுத்தான் இருக்கிறோம்...
நள்ளிரவில் தொந்தரவு
இந்தப்படத்தின் இயக்குனரான ஃபிலிப் நாய்ஸ், ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர். ஹாலிவுட்டில் படங்களை இயக்கிக் கொண்டிருந்தவர். ஹாரிஸன் போர்டின் உதவியாளர். இயக்கிய படங்களில் பெரும்பாலானவை ஆக்ஷன் படங்கள்தான். ஒருநாள் இரவு 3 மணிக்கு ஒரு பெண்ணிடமிருந்து நாய்ஸுக்கு ஃபோன் வந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர் பதறிப்போய் தொலைபேசியை எடுத்தார். மறுமுனையில் பேசியவர் தன் பெயர் கிரிஸ்டின் ஒல்சென் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘சமீபத்தில் ஒரு நாவலை படித்தேன். பிரமாதமாக இருந்தது. மனதை பிசைந்தது. உடனே அதற்கு ஒரு திரைக்கதையை எழுதிவிட்டேன். உங்களால் மட்டும்தான் இந்த திரைக்கதையை படமாக எடுக்க முடியும். உடனே வந்து தரவா?’ நாய்ஸ் அதிர்ந்துவிட்டார். நடு இரவில் இப்படி ஒரு தொலைபேசி அழைப்பா? பேசியவர் யாரென்று அவருக்கு தெரியவே தெரியாது. பேசாமல்விட்டால், நிச்சயம் அந்தப் பெண் தொந்தரவு செய்வாள். அவளது குரல் அப்படித்தான் இருக்கிறது. சலிப்புடன் வரசொன்னார். திரைக்கதையை படித்தார். உடனே படமாக எடுத்துவிட்டார்.
விருதுகள்
2002ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய திரைப்பட கல்லூரி விருதை ஒட்டுமொத்தமாக இந்தப்படம் அள்ளியது. சர்வதேச அளவில் 2002ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைக்கான விருதை ஆஸ்பென் ஃபிம்பெஸ்ட் (அமெரிக்கா), ஈடின்பர்க் ஃபிலிம் பெஸ்டிவல் (இங்கிலாந்து), டர்பன் ஃபிலிம் பெஸ்டிவல் (தென்னாப்பிரிக்கா)... ஆகிய இடங்களில் பெற்றது.
நடிக்க மாட்டேன் போ!
நிஜமான பூர்வகுடி பெண் குழந்தைகளை நடிக்க வைக்க நாய்ஸ் முடிவு செய்தார். இதற்காக பலரை தேர்வும் செய்தார். படத்தின் மைய கதாபாத்திரம் மோலி. இதற்காக சலித்து, சலித்து ஈவர்லின் சேம்பி என்ற பெண்ணை பிடித்தார். இந்தப் பெண் இயக்குனரை படுத்தியபாடு இருக்கிறதே... அது தனி கட்டுரை. இரண்டு முறை சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்பிலிருந்து ஓடிவிட்டாள். ஒருமுறை ஊருக்கு செல்ல டெலிஃபோன் பூத்தில் டிக்கெட் புக் செய்யும்போது பிடிபட்டாள். இந்தப் பெண் வேண்டவே வேண்டாம் என நாய்ஸ் முடிவு செய்து வேறு நடிகையை தேடினார். ஆனாலும் யாராலும் ஈவர்லின் போல் நடிக்க முடியவில்லை. கடைசியில் கெஞ்சி, கெஞ்சி, அவளை மோலியாக நடிக்க வைத்தார். படம் முடிந்தது. நாய்ஸின் தத்துப் பெண்ணாகவே ஈவர்லின் மாறிவிட்டாள். விருதுகளையும் குவித்துவிட்டாள்.
வரும் ஞாயிறு உலக சினிமா பார்க்கலாம் வாங்க
Labels:
பதிவர் வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)

35 comments:
பைத்தியம் ஸார்..
படத்தினை நான் பார்த்துவிட்டேன்.
நல்ல படம்..
வாழ்த்துக்கள்..!
நல்லா படம் ஓட்டுங்க..!
ம்ம்..ஓகே.. வந்துடுவோம்..
அதே தோழமையுடன்
அதே அதிஷா
நன்றி அண்ணா
அன்பின் உண்மைத்தமிழன்,
நீங்கள் பார்க்காத படத்தை இனிமேல்தான் எடுக்க வேண்டும் என ஒரு நண்பனாக எனக்குத் தெரியும் :-). இருந்தாலும் நண்பர்களை சந்திப்பதற்காவது வாருங்கெளேன். உங்கள் திருமுகத்தை பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது :-)
அன்பின் அதிஷா, அவசிம் வாங்க... நண்பர்களையும் அழைத்து வாங்க :-)
அன்பின் முரளிகண்ணன், நேரில் சந்திப்போம் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வட போச்சே!
அடுத்த வாரத்திற்கு மாற்றக்கூடாதா? ஊருக்குப் போகிறேன்.. எதிர்பதிவு போட்டதால வரலைன்னு சொல்லீறாதீங்கப்பா..
//வட போச்சே!//
அன்பின் வால்,
நோ ப்ராப்ளம். நேரில் சந்திக்கும்போது சுடச்சுட வடை சுட்டு தருகிறேன். ஆனால், காக்கா கொண்டு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அன்பின் நர்சிம்,
முதல் ஞாயிறு என்பது நாம் அனைவரும் சேர்ந்து முடிவு செய்த விஷயம். வேண்டுமானால், மாதத்துக்கு இரு படங்களை திரையிடலாமா என்று அனைவரும் உரையாடுவோம். அப்புறம், நீங்கள் ஊருக்கு செல்வது எனக்காகத்தானே :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படத்தைக் குறித்த உங்கள் அறிமுகம் ஆவலைத் தூண்டுகிறது! எனது ஞாயிறுகள் பப்புவுக்கானவை! இருந்தாலும் முயற்சி செய்கிறேன்! :-)
நேரமும் சூழ்நிலையும் சரி வந்தால் பப்புவுடனும், முகிலுடனும் வாருங்கள் ஆச்சி :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//நீங்கள் ஊருக்கு செல்வது எனக்காகத்தானே :-)//
ஆம்..அதற்காகவேதான்.வெற்றியுடன் வருகிறேன்..
நல்ல தேர்வு நண்பரே. காண்பனுபவம் சிறந்த முறையில் அமையட்டும்.
இப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்க ஆசை தான். நேஹாவை அழைத்து வந்தால் யாரையுமே பார்க்க விடமாட்டாளே என்று தான் அஞ்சுகிறேன்! :-)
முயற்சி செய்கிறேன்.
அன்பின் நர்சிம், வெற்றியுடன் திரும்ப வாழ்த்துகள். உங்கள் வெற்றியில்தான் என் வாழ்க்கை அடங்கியிருக்கிறது :-)
அன்பின் சுரேஷ்கண்ணன், இந்த மாதம் நேரம் ஒத்துழைத்தால் கண்டிப்பாக வாருங்கள் :-)
தீபா, சூழல் சரியாக இருந்தால் அவசியம் நேஹாவுடன் வாருங்கள். நேஹாவுக்கு இந்தப்படம் கண்டிப்பாக பிடிக்கும். அனைவரையுமே பார்க்க அனுமதிப்பார் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பதிவில் குறிப்பிட மறந்துவிட்டேன்.
வரும் ஞாயிறுதான், அதாவது ஜூலை 5ம் தேதி, நண்பர் பினாத்தல் சுரேஷ் அவர்களுக்கு 10ம் ஆண்டு திருமணநாள்.
அனைத்து பதிவுலக நண்பர்கள் சார்பிலும் திரு & திருமதி பினாத்தல் சுரேஷ் அவர்களுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்.
///இந்த காலதாமத்துக்காகவும், மொட்டை மாடியில் திரையிடல் நடப்பதற்காகவும், நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.
///
கோழி குருடயிருந்தா என்ன தல, கொழம்பு ருசியா இருக்கான்னு தான் பார்கணும்..
படம் பார்க்க வருகிறர்வர்கள் கர்சிபுடன் வரவும்....
இந்த படத்தை பார்க்க வேண்டும் என் நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன் அதனல் ஒருவித எதிர்பார்ப்பும் கூடியுள்ளது...
ஹைய்யா.. நானும் சென்னைக்கு வரேன்
அன்பின் அக்னிப்பார்வை, சமைத்துப் பார்த்ததில் குழம்பு ருசியாகவே இருக்கிறது. நம்பி சாப்பிட வாங்க :-)
அன்பின் கார்க்கி, சென்னைக்கு நீங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அது சென்னையில் டேட்டிங் செல்லவதற்காக இல்லையே :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வந்துடலாம்
அன்பின் தொடர்பவன், 'வந்துடலாம்' அல்ல; அவசியம் வரவேண்டும் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
உங்களின் படம் குறித்த அறிமுகத்தைப் படிக்கும்போதே, கண்முன்னால் விண்டோஸ் மீடியா பிளேயரில் படம் ஒடுவதுபோல் உள்ளது.
அன்பின் உழவன், வார்த்தைகள் தந்த அனுபவத்தை விட, காட்சிகள் தரும் அனுபவம் இன்னும் பரவசமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். எனவே மறக்காமல் வந்துவிடுங்கள் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
/*இயக்குநர் : ஃபிலிப் நாய்ஸ்*/
சார்.. போன முறை போட்டப்போ...
"கிம்-கி-டுக்" என்பதனை பல பேரு "கம்-டு-கிக்" என்று தவறாக படித்து ஏமாந்து போனார்கள் என்று நையாண்டி செய்ததற்கு, இந்த முறை இப்படி போட்டிங்களா..!!!.
ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....................
நல்ல படம்.
வாழ்த்துகள்.
முயற்ச்சிக்கிறேன்.
அண்ணா மகிழ்ச்சி, என்ன இன்னும் தங்களிடமிருந்து திரையிடல் குறித்து பதிவு இல்லையே என நினைத்துக் கொண்டிருந்த இவ்வேளையில் உங்கள் இந்தப் பதிவு, மிக்க நன்றி, நண்பர்கள் எல்லோரையும் ஒன்றாக சந்திப்பதற்கும், நல்ல திரைப்படத்தை காண்பதற்கும் வாய்ப்பமைத்துக் கொடுத்திருக்கிறது இந்தத் திரையிடல், மிகவும் நன்றிண்ணா.
:)
உலக சினிமாக்கள் பற்றிய பார்வையை பரவலாக்கும் முயற்சியின் முதல் படியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் பைத்தியக்காரன்.
பெனாத்தலாரின் குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!
அன்பின் நையாண்டி, இயக்குநர் பெயர் ஃபிலிப் நாய்ஸ். உங்கள் நையாண்டியை வாசிக்க காத்திருக்கிறேன். நேரம் இருந்தால், சென்னையில் இருந்தால், அவசியம் வாருங்கள் :-)
அன்பின் வண்ணத்துப்பூச்சியார், இப்படியெல்லாம் 'எஸ்' ஆகக் கூடாது. அவசியம் வர வேண்டும் :-)
அன்பின் யாத்ரா, உங்களை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் :-)
அன்பின் சென்ஷி, வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படத்தை பார்த்த மாதிரியும் இருக்கிறது, பாக்காத மாதிரியும் இருக்கிறது.. :)
//ஆம்..அதற்காகவேதான்.வெற்றியுடன் வருகிறேன்..//
படை பலம் போதுமா தளபதியாரே?
சீக்கிரம் வெற்றியோடு திரும்பி வர பைத்தியகாரன் அண்ணாச்சி கட்டைவிரலை கீறி இரத்த திலகம் இட்டு உங்களை வழி அனுப்பி வைப்பார்!
திரும்பவும் ஒரு மொட்டைமாடி நிகழ்ச்சி. இந்த முறையாவது கட்டாயம் வந்துவிடவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டாயிற்று. பார்க்கலாம்.
// நர்சிம் said...
அடுத்த வாரத்திற்கு மாற்றக்கூடாதா? ஊருக்குப் போகிறேன்.. எதிர்பதிவு போட்டதால வரலைன்னு சொல்லீறாதீங்கப்பா..
//
:-)
பதிவுக்கு நன்றி பைத்தியக்காரன். அவசியம் வரேன்.
அடடா இப்போது தான் உங்களின் பதிவை பார்க்கிறேன். இனிமேல் தொடர்ந்து பார்கிறேன்.
மீண்டும் அடுத்த படம் எப்போது என்று ஆவல் தொற்றிக் கொண்டது. விரைவில் எதிர் பார்கிறேன்.
அன்புடன்,
கிருபா. சரவணன்
படத்தைப் பற்றிய நல்ல தகவல்.நன்றி.
அருமை நண்பர் பைத்தியகாரன், மற்றும் பதிவுலக தேனடையில் அங்கமாயிருக்கும் அனைத்து நன்பர்களுக்கும். என் வணக்கங்கள்.
நான் இதுபோன்ற வட்டாரத்திற்கு, மிகவும் புதியவன். (என் முதல் அனுபவம் இதுதான்), என் முதல் கதை இந்த சிறுகதை போட்டியில் தான் எழுதியுள்ளேன்.
http://yuvaking2005.blogspot.com/
படித்துவிட்டு விமரிசிக்குமாறு கேட்டுகொள்கிறேன்
ஆக நான் இந்த வட்டாரத்திற்கு(இலக்கிய, இலக்கண), இருவாரங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை.
ஆகையால் தவறு இருப்பின் மண்ணித்து திருத்த முயலுமாறு பணிவன்புடன் இறைஞ்சுகிறேன்.
இப்படிப்பட்ட வட்டாரங்கள் இருப்பதை கண்டு ஞாயிறன்று வியப்பிலாழ்ந்தேன்.
ஞாயிறன்று திரையிடப்பட்ட படம், அருமையாக இருந்தது.
படத்தை பற்றி கருத்துக்களை கேட்ட போது என் கருத்தை சொல்ல விருப்பம் இருந்தது. ஆனால் பல பெரியோர்கள் அங்கிருந்ததால், தயக்கத்தில் சொல்ல முடியவில்லை, ஆனால் அடுத்தமுறை நிச்சயம் சொல்வேன். கீழே படத்தை பற்றிய என் பிதற்றல்கள் சில...
1. அருமையான படம், நன்பர்கள் பலர் சில தொழில்நுட்ப குறைபாடுகளை சொன்னார்கள். ஆனால் அவைகளை என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. (அதாவது குழந்தைகளுக்கு அடிபடவில்லை, சாப்பாட்டிற்கு என்ன செய்தார்கள், பழையபடம் போன்று இல்லை....)
இல் என் கருத்து என்னவென்றால், சிறிய குழந்தைகளால் 1500 கி.மீ. நடந்து வர முடியும் என்றால் ? இவைகளெல்லாம், சிறிய விடயங்கள் என்றே தோன்றுகின்றன.
படத்தின் ஆரம்பத்தில் தன் குழந்தைக்கு அந்த தாயார் சில விடயங்களை சொல்லித்தருகிறார். சில அடையாளங்களை வைத்து எப்படி பின்தொடர்வது, கழுகு, போன்ற விடயங்கள். அவர் இந்த குழந்தையை நீ சிறந்த வேட்டைக்காரன் என்றும் சொல்லுகிறார்.
முடிவாக.. ஒரு தாய்மை, தன் பிள்ளைகளை இயற்கையோடு இசைந்து வாழ கற்றுகொடுத்துவிட்டால், புத்திசாலியான பிள்ளைகள் இந்த உலகத்தில் எப்படிப்பட்ட இடறல்களையும் தாண்டி விடுவர் என்பற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம்.
கடைசியாக தாயும், பாட்டியும் சேர்ந்து அந்த வெள்ளையனை எதிர்த்து துரத்துவது, நன்றாக இருந்தது, நம்மை காப்பாற்ற நம்மைத்தவிற வேறு யாரும் வரமாட்டார்கள், நாம்தான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதும் புலனாகிறது.
2. நன்பர் பைத்தியகாரன் அவர்கள் கடைசியாக, இந்த கதையை ஈழத்து பின்புலத்திலும் பார்க்கலாம் என்று சொன்னது சரிதான் ! எனக்கும் அந்த படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஆஸ்திரேலியாவில் துன்பப்படும் மக்களை வெளிச்சம் போட்டு காட்டும் இதுபோன்ற படம் நம் ஈழத்து மக்களுக்காக வராதா என்ற ஏக்கம் படம் முழுவதும் இருந்து கொண்டே இருந்தது.
3. தமிழ்நாட்டில், ஏன் சென்னையிலும் பலபேர்(தமிழர்கள்), ஈழத்தமிழர்களை காப்பிதோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள், தனி நாடு கேட்பது சரியா ? என்று கேட்கிறார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளாக அந்த தேசத்தினை ஆண்டவர்கள் நம் தமிழர்கள், என்பதை எப்போது அறிந்து கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
(இங்கு நான் ஒன்றை அழுத்மாக உரைக்க விரும்புகிறேன். நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் அல்ல, வன்முறையில் எனக்கு எப்பொழுதும் நம்பிக்கையில்லை.)
என் ஆவல் எல்லாம் பல தலைமுறைகளாக வாழ்ந்துகொண்ழருக்கும் மக்களுக்கு ஏன் அவர்கள் உரிமை பறிக்கப்படுகிறது.
ஐனநாயகம் பேசும் ஐ.நா. மற்றும் பல உலக சமாதானத்தை விரும்பும் நாடுகள், மற்றும் அந்த நாட்டில் உள்ள தலைவர்கள், எம் ஈழத்துமக்ககளுக்கு என்ன செய்ய போகிறார்கள் ?
(கிறித்தவர்களின் பைபிளில் ஒரு வாசகம் உண்டு "நன்மை செய்ய திராணியிருக்கும்போது அதை தேவையானவர்களுக்கு செய்யாமல் இராதே")
இதை எத்துனை நாடுகள் யோசிக்கப்போகின்றன ?
எத்துணை தமிழர்கள் யோசிக்கப்போகின்றனர் ?
சினிமா பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது "நீ உன்னை அறிந்தால், இந்த உலகத்தில் போராடலாம்"
சரி நான் இலக்குக்கு வருகிறேன் !.
அருமையான முயற்ச்சி திரு பைத்தியக்காரன் அவர்களே !.
பாராட்ட வயதுமில்லை, வார்த்தைகளும் இல்லை.
அடுத்த படம் எப்போது ?
(நான் எழுதிய மேற்கண்ட காரியங்கள் யாரையும் புண்படுத்தவோ உணர்வுகளை காயப்படுத்தவோ அல்ல. குறையிருப்பின் மண்ணித்து திருத்தவும்)
நன்றி ! நன்றி ! நன்றி!
Post a Comment