அப்பா பெயர் க.நாகராஜன். மின்வாரியத்தில் அக்கவுண்ட்ஸ் ஆபிசராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அம்மா ஆனந்தி. ஹவுஸ் ஒய்ஃப். அக்கா, நான் என இரண்டே பிள்ளைகள். அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. மாமா தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒரு பெண், ஒரு ஆண் என அவர்களுக்கு இரு குழந்தைகள்.
உயிர் இருந்தபோதே அப்பா எனக்கு திருமணம் செய்து வைத்தார். பெரியவர்களாக மகாலிங்கபுரம் சார்ட்டில் பதிவு செய்து நடத்தி வைத்த திருமணம். ஒரே வாரத்தில் பிரிந்துவிட்டோம். காரணம், மருத்துவம் தொடர்பானது. திருமணம் என்னும் பந்தத்துக்குள் இணையக் கூடாது என மருத்துவர்கள் பரிந்துரை செய்ததை மீறி, அவர்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த விஷயம் எங்களுக்கு தெரியாது. தெரிந்த பின்னர், பெரியவர்களின் செவிகளுக்கு இந்த விஷயம் செல்லாமல் பார்த்துக் கொண்டேன். அப்படியும் கசிந்துவிட்டது. அப்பாவும், அம்மாவும் அதிர்ச்சியை தாங்கிக் கொள்வதற்குள், துணைவியாக வந்தவர் பிரிவதாக அறிவித்தார். நிதானித்து பதில் சொல்வதற்குள் தன் வீட்டுக்கு அவர் சென்றுவிட்டார்.
*************
இப்படியெல்லாம் செய்வார்களா? தெரியாது. இதற்கு முன் யாராவது செய்திருக்கிறார்களா? கேள்விப்பட்டதில்லை. இருக்கலாம். இல்லாமலும் போகலாம். என்றாலும் இந்த 'நட்சத்திர வாரத்தை' ப்ரியத்துக்குரிய ஜ்யோவ்ராம் சுந்தருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
எதனால்?
*************
பேசி தீர்வு காணலாம் என்றேன். அப்பாவும், அம்மாவும் ஏற்றுக் கொண்டார்கள். ஒரு கை ஓசை. விட்டுவிட்டுப் பிடிக்கலாம் என முடிவானது. மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தோம். பின்பக்கமாக மறு கதவு திறந்தது. அதுவரை வாடகை வீடுகளில் நிரம்பிய வாழ்க்கை, சொந்தக் கூரைக்கு குடி போனது. 66 ஆண்டுகளாக அப்பாவுக்கு விதிக்கப்பட்ட சாபம் நீங்கியது. கனரா வங்கி கனிவுடன் கடங்காரனாக்கியது. தனக்கான கூடாரத்தில் அப்பா நிமிர்ந்து நின்றார். 'என் புள்ள எனக்காக வாங்கின வீடு'
*********
வெகு சுருக்கமான அறிமுகம் என்னை குறித்து போதுமானதாக இருக்கிறது. வார்த்தைகளால் ஆனவன். வாக்கியங்களை தின்று சொற்களால் வளர்ந்தவன். பதிவுலகுக்கு வந்தது தற்செயலானது. உதிரும் கனவுகளை எங்காவது நிரப்பியாக வேண்டும். இல்லாவிட்டால் கனவுகளின் சமாதியில் மூச்சு நின்றுவிடும் என்றநிலையில் ஆதரவாக தோளில் ஒரு கரம் விழுந்தது.
நண்பர் யெஸ்.பாலபாரதி.சொற்களையும் கனவுகளையும் விழுங்கும் வல்லமைப் படைத்த குடுவையை தந்தார். 'சிதைவுகளில்' பைத்தியக்காரன் உதிர ஆரம்பித்தான்.
பின்னூட்டம் வழியாக சுந்தர் அறிமுகம். சாட் மூலமாக பரஸ்பர குசலம். கைபேசி 'ஹலோ'வை பகிர்ந்து கொண்டது. குரல்கள் அடையாளம் கண்டுக் கொண்டன. நேரில் சந்தித்துக் கொள்ள சூழல் அனுமதிக்கவில்லை.
********
வார இதழில், இதழாசிரியராக பணிபுரிந்த நேரம். ஃபைனலுக்கு முந்தைய பாரத்தை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பினேன். உள்வாங்கும் இருள். ஆக்ரோஷமான பசி. கையேந்தி பவனில் பறந்த இட்லியின் ஆவியை பர்ஸை ஆக்ரமித்திருந்த வெறும் காற்று அடித்து விரட்டியது. கண்களை பிடுங்கும் அசதி. கதவைத் திறந்த அம்மா, பாத்திரங்களை கவிழ்த்திருந்தாள். கட்டை சாய்ந்தால்போதும். செல்கள் அனைத்தும் கெஞ்சின. படுக்கையில் விழுந்தேன்.
கடிகாரத்தின் முள் எந்த இடத்தில் நின்றது என்று தெரியவில்லை. பலமாக உலுக்கப்பட, இமைகளை கட்டிங் பிளேயர் இல்லாமல் பிரித்தேன். பயத்துடன் அம்மா.
'அப்பா கூப்பிடறாரு...' எழுந்தேன். கட்டிலில் அப்பா. நீட்டிய கை சில்லிட்டிருந்தது. வியர்வையில் குளித்திருந்தார். மைல்ட் அட்டாக். விஜயாவா? அப்போலோவா? ஆம்புலன்ஸ் நம்பர் என்ன? எத்தனை லட்சங்களாகும்? யாரிடம் கேட்பது? தருபவர்கள் யார்?
கைகளை பிடித்து அழுதார். 'மன்னிச்சிடுடா... உன் வாழ்க்கைய கெடுத்துட்டேன். ஒழுங்கா விசாரிச்சிருக்கணும். தப்பு எம்மேலதான். தனியா உன்ன படுக்க வச்சிட்டேன்...'
'உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்...' அறிவு விரட்டியது.
'எதுக்குபா இந்தநேரத்துல இதையெல்லாம் பேசற... எனக்கு ஒண்ணும் இல்ல. சந்தோஷமாதான் இருக்கேன். பேசாம படு...'
காந்தி ஏன் புன்னகைக்காமலேயே இருக்கிறார்?
கைகளை விடுவித்து அறைக்கு வந்தேன். பின்னாலேயே அம்மா. 'அவர பார்த்தா பயமா இருக்குடா... ஆஸ்பத்திரிக்கி போகலாமா?'
வெறுங்கை முழம் போட முயற்சித்தது. சாத்தியமில்லை.
'அவசியமில்லமா. வெறும் மனக்கஷ்டம்தான். சரியாகிடும். பேசாம படு.'
படுத்தாள். உறங்கினாளா என்று தெரியாது.
காலையில், 'எம் பொண்ண பார்க்கணும் போல இருக்குடா. போயிட்டு வரேன்' என்றார் அப்பா. உடன் அம்மா.
*********
தேவநேயர் பாவாணர் நூலகத்தில் ஏதோவொரு கூட்டம். அறிமுகமாகியிருந்த சுகுணாவுடன் சென்றேன். யாரிடமோ கைப்பேசியில் பேசிவிட்டு, 'சுந்தர் வந்துகிட்டே இருக்காராம்...'
சாம்பல் நிற டிரக் பேண்ட்டும், வெளிர் பச்சை நிற டீ ஷர்ட்டுமாக சுந்தர்.
'ஹாய்...'
பளீர். யாரோ ஓங்கி அறைந்தார்கள். கிடுகிடுவென உடல் நடுங்கியது. அடிவயிற்றிலிருந்து ஓலம் பீறிட்டது. ஐயோ... கத்தப் போகிறேன் என நினைத்தேன். ஆனால், சுருதி சுத்தமாக 'அண்ணா...'
'யோவ் உன் வயசுதான்யா எனக்கும். அண்ணானு கூப்பிட்டு இளமைய காட்டிக்க பாக்கறியா? இது போங்கு ஆட்டம். நானும் கூப்பிடறேன், 'அண்ணா!'
புன்னகையை கசியவிட்டபடி சுந்தர் என்னருகில் அமர்ந்தார்.
அதென்ன 'ர்?'
'ன்'தான்.
அமர்ந்தான், அருகிலிருந்த நாற்காலியில் மட்டுமல்ல.
------------
கவர்ஸ்டோரியை பார்த்துக் கொண்டிருந்தபோது தொலைபேசி. அழுகையுடன் அக்கா. புரிந்தது. இனி அம்மாவும் நானும்தான்.
சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாத மகனது பொருளாதார நிலை, தந்தையின் இருதயத்தை நிறுத்திவிட்டது. மூச்சை இழுத்துப் பிடித்து பொறியியல் படிக்க வைத்தபோது கூட இதயம் தன் துடிப்பை நிறுத்தவில்லை. கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தபோது அந்த இருதயம் அடைந்த நிம்மதிக்கு அளவேயில்லை. தொன்னூறுகளின் மத்தியில் பயிற்சிக் காலத்திலேயே ஐந்திலக்க சம்பளம். தன் பணிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் ஒன்றாம் தேதியன்று அப்பா பார்த்த தொகை. விடியலின் முதல் கீற்றை அவரது இருதயம் ஒருவேளை தரிசித்திருக்கலாம்.
ஆனால், பத்திரிகை அலுவலகமாக ஏறி இறங்கி மூன்றிலக்க சம்பளத்தில் மகன் வேலைக்கு அமர்ந்தபோது, அவரது இருதயம் இருளில் முங்கி எழுந்தது.
விரும்பிய தாளகதியுடன் என் இதயம் துடிக்க, அப்பாவின் இருதயத்தை நிறுத்திவிட்டேன்.
--------------
வழுக்கை விழுந்த முன் நெற்றி. கூர்மையான நாசி. பால் வடியும் முகம். குறும்பு மின்னும் கண்கள். வார்த்தைகளில் தெறிக்கும் நக்கல். நையாண்டி. அரிசி உப்புமாவை ருசித்து சாப்பிடும் குணம்.
அச்சு அசல் அப்பா.
சுந்தரை முதல் முறையாக பார்த்ததும் உடல் அதிர்ந்ததற்கு காரணம் இதுதானா? இதுவும்தான். பறிகொடுத்தவனுக்கு அல்லவா தொலைத்ததன் அருமை தெரியும்?
அதனாலேயே அவனை பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை. 'அண்ணா' என்பது பாதுகாப்பாக இருக்கிறது. குற்ற உணர்விலிருந்து தப்பிக்கவும். பதிலுக்கு 'அண்ணா' என சுந்தர் அழைக்கும்போது உவகை கொள்ளும் மனது, வேறு யாரையும் அதேபோல் அவன் 'அண்ணா' என்று அழைத்து விடக்கூடாதே என தவிக்கவும் செய்கிறது.
அப்பா காலமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே சுந்தரின் அறிமுகம் கிடைத்தது. அன்றைய சந்திப்புக்குப் பின், பல சந்திப்புகள் நிகழ்ந்துவிட்டன. மலர்ந்துவிட்டன. தினசரி தொலைபேசியில் உரையாடுவது என்பது தவிர்க்க இயலா அம்சம்.
லயித்த நிலையில், 'சொல்லுங்க பைத்தியக்காரன்' என்பான். இதனால் ஆரம்பத்தில் அவன் வீட்டில் சண்டையே நடந்திருக்கிறது. 'என்ன, ஒரு பிரெண்ட போய் மரியாதையே இல்லாம பைத்தியக்காரன்னு சொல்றீங்க? அவரு மனசு என்ன பாடுபடும்?' சத்தம் போட்டிருக்கிறார்கள். பரிதாபமாக, 'அவன் பேரே பைத்தியக்காரன்தாம்மா... வேணும்னா நீயே கேளு... அண்ணா, நீங்க பைத்தியக்காரன்தான?'
ஐந்தாவது படிக்கும் சுந்தரின் மகளை முதன் முறையாக வீட்டில் பார்த்தபோது, 'குட்டிமா, பார்க்கணும்னு சொன்னியே... நல்லா பார்த்துக்க. இவருதான் பைத்தியக்காரன்' அறிமுகப்படுத்தினான்.
நோய் விட்டுப் போயிற்று.
தொடர் சங்கிலியாக இணையும் எங்கள் உரையாடலில் லெளகீக வாழ்க்கை குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டதும், பேசியதும் சொற்பம். அந்தந்த கணங்களை பொறுத்து எதிர்படுபவர்களிடம் அவ்வப்போதைய வாழ்க்கையின் சிரமங்களை பகிர்ந்து கொள்ள முடியும். அப்படியே பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் அது குற்றமாகவோ பிரச்னையாகவோ உருவெடுப்பதில்லை. ஆனால், அனைவரிடமுமே சில விஷயங்கள் மறைவாக சுரக்கின்றன. அவற்றை சரியான தளத்தில் குறியீடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அமையும்போதே குறிஞ்சி, முல்லை, மருத திணைகளும் அக வெளியில் விரிகின்றன.
அப்படியான ஊற்று, பொதுவில் பிரதிகளாக இருவருக்கும் அமைந்துவிட்டது.
சுந்தருடன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உரையாட ஆரம்பித்தப் பின், நகுலனையும், பிரமிளையும் வாசிப்பதை நிறுத்திவிட்டேன். அவர்களை வாசிக்க பிரியப்படும் நேரத்தில் சுந்தரை அழைப்பேன். கைப்பேசியில் அவர்களால் எழுதப்பட்ட கவிதைகளை வாசிப்பான். அவனது குரல், ஏற்ற இறக்கம், வழியும் உணர்ச்சி, அப்போதைய மனநிலை என எல்லாமும் சேரும் இடத்தில் நகுலன் அல்லது பிரமிள் என்ற பெயர்கள் மறைந்து, எங்களால் உச்சரிக்கப்பட்ட சொற்கள் வேறொரு பிரதியாக அறையெங்கும் சிதறியிருக்கும். பேட்டரி தீர்ந்த நிலையில் அந்த வார்த்தைகளை சேகரித்து முன் பின் மாற்றி வரிசைப்படுத்துவது அதன் பிறகு வரும் இரவின் தனிமையை எதிர்கொள்ள உதவும்.
---------------
இரவுகளை அம்மா எதிர்கொள்ளும் விதம் ரத்தமும் சீழும் நிரம்பியது.
என் அறையில் விளக்கு எரிந்தால் அவ்வப்போது கதவைத் தட்டிவிட்டு எட்டிப் பார்ப்பாள். 'இன்னும் தூங்கலையாடா...' நூற்றாண்டுகளை சுமந்து திரியும் அம்மாவுக்கான வார்த்தைகள், சாட்டையை போன்றவை. 'சொளீர்' என வீசுவாள். எதிராளியின் உடலை அது பதம் பார்க்காது. பதிலாக தன் சதையை தானே கிழித்துக் கொள்ளும்.
இதனாலேயே நள்ளிரவு வரை புத்தகங்களை வாசிப்பதில்லை. குடும்பம் அமையாத என் இருப்பு அவளை தொந்தரவு செய்கிறது. சொல்லிப் பார்த்தாயிற்று. தனியாக வாழ்வதும் வாழ்க்கைதான் என்று. 63 ஆண்டுக்கால அவளது வாழ்க்கை அதை ஏற்க மறுக்கிறது. நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் தத்தளிக்கிறாள். உச்சந்தலையில் ஆரம்பித்து உள்ளங்கால் வரை சுருக்கங்கள் விழ ஆரம்பித்துவிட்டன. பிடிவாதமாக என் துணிகளை அவளே துவைக்கிறாள். அதனாலேயே உள்ளாடையில் அறியாமல் கூட கறை படியா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன். ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்ததில் படிந்துவிட்ட கறைகள் அவளை ரணமாக்கிவிட்டன. வெடித்து சிதறிய அவளது அழுகையை பார்க்க சகிக்காமல் இப்போதெல்லாம் கழிவறைகளில் நிம்மதியை தேடிக் கொள்கிறேன்.
--------------
மாலையுடன் அப்பாவின் புகைப்படம் ஹாலை நிரப்ப ஆரம்பித்து வருடங்கள் கடந்துவிட்டன. சட்டப்படி திருமண பந்தத்திலிருந்து இந்திய அரசு விடுதலை அளிக்க முன் வந்தது. செட்டில்மெண்ட். ஒரே தவணை. தேவை பல லட்சங்கள். அனைவரிடமும் கையேந்தி, மாமாவின் அனுமதியுடன் அக்கா, மற்றும் அம்மாவின் நகைகளை அடகு வைத்து வெளியே வந்தேன்.
நகைகளை மீட்க வேறொரு கடன். அதை அடைக்க இன்னொரு இடம். ஊர். தெரு. முட்டுச் சந்து.
30 ஆயிரங்களை சம்பளம். ஆனால், 40 ஆயிரம் வரை மாதந்தோறும் வட்டி மட்டுமே கட்டியாக வேண்டிய சூழல். ஒரு கட்டத்தில் சுந்தர், ஜமாலன், நர்சிம், அப்துல்லா என வலையுலக நண்பர்கள் இணைந்து பாதி கிணறைத் தாண்ட உதவினார்கள்.
அப்படியும் சென்ற ஆண்டின் இறுதி மூன்று மாதங்களும், இந்த ஆண்டின் தொடக்கமும் போராட்டமானவை. வட்டி கட்ட முடியாத நிலையில் எனது ஏடிஎம் கார்டை கடன் கொடுத்தவர் பெற்றுக் கொண்டு சென்றார்.
தொடர்ச்சியாக 4 மாதங்கள் பதிவுலக நண்பர்களில் சிலர் 5, 10 என தங்களால் முடிந்ததை கொடுத்து என்னை புன்னகைக்க வைத்தார்கள்.
வலையுலகம் தந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. இந்த மாதம் வட்டியில்லாமல் உதவிய அனைவருக்கும் பணத்தை திருப்பித் தந்துவிடுவேன். அதற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.
-------------
நெகிழ்ச்சியாக இப்படி 'தனிப்பட்ட' வாழ்க்கையை வார்த்தைகளால் நிரப்பிக் கொண்டே செல்வதை இத்துடன் நிறுத்துவதுதான் நல்லது. இது 'அழுகாச்சி காவியமும்' அல்ல. எஸ்.ர.ராஜ்குமார் இசையில் 'லாலலா...' ஒலிக்க இயக்குநர் விக்ரமனின் கதாபாத்திரங்கள் உணர்ச்சிப்பூர்வமாக பேசும் மேடை நாடகங்களும் அல்ல.
அவரவர் வாழ்க்கை. அவரவர் சோகங்கள். அவரவர் சந்தோஷங்கள்.
இந்த இடுகையிலுள்ள பல சம்பவங்கள், அதன் மாதிரிகள் இதை வாசிக்கும் பலரது வாழ்க்கையிலும் நடந்திருக்கும். இதைவிட மோசமாகவோ அல்லது இது போன்றோ. இல்லாவிட்டாலும் கேள்விப்பட்ட விஷயங்களாகவாவது செவிகளை நிரப்பியிருக்கும். 'நிகழ்வுகள்' என்பதைத் தாண்டி 'இதில்' வேறென்ன இருக்கிறது? புறச் சூழலில் ஏற்படும் மாறுதல்கள் அனைவரது அகச் சூழலிலும் எதிரொலிக்கவே செய்கின்றன. தலைமுறை இடைவெளிகள் ஏற்படுவதும், முந்தைய தலைமுறையின் சட்ட திட்டங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு செல்லுபடியாகாமல் போவதும் காலம்தோறும் நடப்பவைதான். இதெல்லாம் போக 'தனிப்பட்ட' வாழ்க்கை என ஒன்று இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் 'அதை' பகிர்ந்துக் கொள்ள முயலும்போதெல்லாம் 'அது' புனைவாக அல்லவா உருமாறுகிறது?
மேலே எழுதப்பட்ட தனிப்பட்ட வாழ்க்கை என்ற புனைவையே எடுத்துக் கொள்வோம். இது 'பைத்தியக்காரன்' என்ற ஒரு மனிதர் சொல்வதுபோல எழுதப்பட்டிருக்கிறது. இதையே 'அப்பா' அல்லது 'அம்மா' அல்லது 'துணைவியாக வந்த நபர்' அல்லது 'அக்கா' அல்லது 'மாமா' என பலரது பார்வையிலும் எழுதிப் பார்க்கலாம். அனைத்துமே ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒருவர் பார்வையில் 'நியாயமாக' இருப்பவை அடுத்தவர் பார்வையில் 'அநியாயமாக' உருமாறியிருக்கும்.
ஒவ்வொரு பிரதி/தனிப்பட்ட வாழ்க்கை என சகலத்திலும் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு நடுவில் சொல்லப்படாத இன்னொரு பிரதி/தனிப்பட்ட வாழ்க்கை குறியீடாக மறைந்திருக்கிறது. மேலே எழுதப்பட்ட 'வாழ்க்கையையே' எடுத்துக் கொள்வோம். அதில் மறைந்திருக்கும் பிரதி/தனிப்பட்ட வாழ்க்கை, 'பாவம் ஒரு பெண்ணால ஏகத்துக்கு மன வருத்தப்பட்டு, உறவுகளை பறிகொடுத்துட்டு கடங்காரனாகிட்டாரு...பெண் என்பவர் ஏமாற்றுக்காரர். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே....' இத்யாதி. இத்யாதி.
ஆனால், இந்த 'தனிப்பட்ட' இடுகையில் துணைவியாக வந்தவரின் பங்கு என்று சொல்ல என்ன இருக்கிறது? வயதுக்குரிய கனவுகளை பீய்த்து எறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவரது கொடூரமான வாழ்வு இங்கு பதிவாகியிருக்கிறதா? அவரைக் குறித்து சிறிதளவாவது யோசிக்கும்படி உணர்த்தப்பட்டிருக்கிறதா?
இல்லையே. அதனால்தான் வாசிப்பின் வழியே மனதில் சித்திரங்கள் வரையப்படுவது இப்படியான எழுதப்பட்ட வாக்கியங்களுக்குள் மறைந்திருக்கும் எழுதப்படாத குறியீடுகளால் என்று சொல்லத் தோன்றுகிறது.
யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருவரும் தங்கள் அகத்தின் பரப்பில் நினைக்கும்/எழுதிப்பார்க்கும் வார்த்தைகளுக்கான அர்த்தம்/குறியீடு வேறு என்பதும், அதையே பொது வெளியில் உச்சரிக்கும்போதோ அல்லது எழுதிப் பார்க்கும்போதோ அதன் அர்த்தம்/குறியீடு வேறு மாதிரியாக மாறிவிடுகிறது என்பதும் புரியும் . காரணம் பொதுவெளியில் புழங்கும் மொழி/குறியீடு, அகராதியையே பெருமளவு சார்ந்திருக்கிறது. இந்த அகராதியும் ஒரே மொழியை/குறியீட்டை பயன்படுத்தும் பல மனிதர்கள் அல்லது கூட்டு மனிதர்களுக்கானது. அதனாலேயே 'உனக்கு எப்படி புரிய வைக்கறதுனு தெரியலை...' என பலநேரங்களில் நொந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு உயிரும் தனக்கான தனிப்பட்ட அகராதியை/குறியீடுகளை தன் அகத்தில் பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறது. பொதுத் தளத்துக்கு வராத இந்த அகராதியை வாசிக்கும் 'பாக்கியம்' கிடைத்தவர்கள் பாலினம் சார்ந்து நண்பர்/தோழி/தோழன்/காதலன்/காதலி என அர்த்தமாகிறார்கள்.
அந்தவகையில் பொதுப் பரப்புக்கு வராத என் அகப்பரப்பின் அகராதியை குறியீடுகளுடன் வாசித்து அர்த்தம் கொள்ளும் 'வல்லமை' ஜ்யோவ்ராம் சுந்தருக்கு இருக்கிறது. 'தமிழ்மணம்' மூலமாகவே அவன் எனக்கு அறிமுகமானான். இரண்டற கலந்தான். கோபி கிருஷ்ணனின் நூல்களை பதிவுலகுடன் பகிர்ந்துக் கொண்டது முதல் 'உரையாடல்' அமைப்பின் தோற்றம், செயல்பாடுகள் வரை அனைத்தும் சாத்தியமானது அதனால்தான். அவன் ஒருவனால்தான். அவனின்றி இந்த அணு அசைவதில்லை.
அதனாலேயே 'தமிழ்மணம்' கொடுத்த இந்த 'நட்சத்திர வாரத்தை
' அவனுக்கே சமர்ப்பணம் செய்கிறேன்.
அதனாலேயே 'தமிழ்மணம்' கொடுத்த இந்த 'நட்சத்திர வாரத்தை
' அவனுக்கே சமர்ப்பணம் செய்கிறேன். இதைத்தவிர வேறு எப்படி என் அன்பை வெளிப்படுத்த?
*******
அம்மாவுக்கான தீச்சட்டியை தயாரிக்கும்படி எங்கோ இருக்கும் களிமண் நிர்பந்தித்துக் கொண்டே இருக்கிறது. முகமறியா கரங்கள் தேவையான நேரத்தில் அதை தயாரித்து என் கைகளில் கொடுக்கும். ஏந்தத்தான் போகிறேன். எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், அம்மாவையும் கொலை செய்யப் போகிறேனா என்ற கேள்விக்கு அகப்பரப்பில் கிடைக்கும் விடையை மட்டும் 'வாசிக்க' இப்போதைக்கு துணிவில்லை.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பைத்தியக்காரன்
(புகைப்படங்கள்: நண்பரும் பதிவருமான ஆதிமூலகிருஷ்ணன்)


109 comments:
அன்புள்ள சிவராமன்,
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள். கலக்குங்க.
நட்சத்திர வாழ்த்துக்கள்.
படித்தவுடன் தோன்றுகிற உணர்சிகளை என்னவென்று வகைபடுத்த முடியவில்லை...
:)(
நட்சத்திர வாழ்த்துக்கள்.
:)
தமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்கள்..
:)
நட்சத்திர வாழ்த்துக்கள்ண்ணா..
சமர்ப்பண ஆரம்பம் அற்புதம்.
"நச்!"சத்திர வாழ்த்துகள் !
சிவராமன்,
நட்சத்திர வாழ்த்துக்கள்.
எழுத்தாளர்.பைத்தியக்காரன்,
நட்சத்திர வாழ்த்துக்கள்..!
உங்கள் இருவரின் நட்பு என்றென்றும் தொடரவேண்டும். உங்கள் இடுகையையை இலக்கிய வாசிப்பாக எடுத்துக் கொள்ளனுமா ? தகவலாக எடுத்துக் கொள்ளனுமா ? குழப்பமாக இருக்கு. எப்படி எடுத்தாலும் மனசு கனக்குதுங்க
நட்சத்திர வாழ்த்துகள் தோழரே
அறிமுகக் குறிப்புகளும் மிக நன்றாக எழுதப்பட்டுள்ளன.
தங்கள் எழுத்து மனதை என்னவோ செய்கிறது. நான் தங்களை கொஞ்ச நாளாகவே அறிவேன். எனக்கு தெரிந்து நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்வை பற்றி அதிகம் பேசுவதோ/ எழுதுவதோ இல்லை (சாரு பிரச்சனையின் போது கொஞ்சமாக எழுதினீர்கள்... அவ்வளவே) ; இம்முறை தங்களை பற்றி எழுதி உள்ளது ஆச்சரியம் தருகிறது.
இந்த பதிவில் ரெண்டு விஷயங்களை மாற்றி மாற்றி எழுதி ஒரு புள்ளியில் ரெண்டையும் இணைத்தது தங்களை ஒரு தேர்ந்த எழுத்தாளராக காட்டுகிறது
உங்கள் - சுந்தர் நட்பு போல் அமைவது ஆச்சரியம். என்றும் இது தொடரட்டும்..
On a lighter vein: "குறியீடு" விட மாட்டீங்களே.. :))))
தாங்கள் இந்த வார நட்சத்திரமாக இருப்பது ஏனோ எனக்கு மிகந்த மகிழ்ச்சி தருகிறது; ஏனென்று தெரியலை
விழாவின் கடைசியில் என்னின் கேள்விக்கான உனது பதில் இப்போது தெரிந்தது..:(
நமக்கான 19 ஆண்டுகால வெளியை புளியம்பழம் கொண்டு ஒரு நாள் நிரப்புவோம்:) நான் நானாகவே வருகிறேன். நீ தயவுசெய்து அப்போது எனக்கு சிவராமனாகவே இரு எனக்கு அது போதும்.
வாழ்த்துக்கள்.
//சுரேஷ் கண்ணன் said...
அறிமுகக் குறிப்புகளும் மிக நன்றாக எழுதப்பட்டுள்ளன.//
மிக சரி; நானும் வெகுவாக ரசித்தேன்
நெகிழ வைத்துவிட்டீர்கள்!நட்சத்திர வாழ்த்துகள்!
மிக அற்புதமான சமர்பணம் படிக்கும் போதே நெஞ்சம் நெகிழ செய்து விட்டது..உங்கள் அப்பாவுக்கு என் வந்தனங்கள்...
உங்கள் இருவரின் நட்புக்கு இந்த ஜாக்கியின் ராயல் சல்யூட்...
நட்சத்திர வாழ்த்துக்கள்.
தமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்கள்!!!
கலக்குங்க.
இதெல்லாம் கொலை என்றெல்லாம் இல்லை.
எதிர்பார்ப்புகள்; ஏமாற்றங்கள். அவ்வளவுதான்.
பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்த்தல் ஒரு ஏற்றுக்கொள்ளமுடியா விடயம்.
பெற்றோரும் பிள்ளைகளும், ஒரு கால கட்டத்திற்குப்பின் அன்னியரே. courtesy:கலீல் கிப்ராண்
கட்டுரையின் தொடக்கம் Albert Camusஐ நினைவுபடுத்துகிறது.
38 வயதில் இவ்வளவு சன்னியாசத்தனமான சிந்தனைகள் தேவையில்லை.
பெண்களைப்பற்றித் தவறான கணிப்பு தெரிகிறது.
ஒரு பெண் ஒரு உலகமல்ல.
உலகத்தில் அனைத்துப்பெண்களும் ஒரே அச்சில் வார்த்து எடுக்கப்பட்ட குளோன்கள் அல்ல.
ஆண்களின் எத்தனை வெரைட்டி இருக்கின்றனவோ, அத்தனை பெண்களிலும் உண்டு.
ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் உண்டு. ஆனால் தேடிக்கண்டுபிடித்தல் ஒரு சாதனை.
self-portraitல் பெரும் வியப்பொன்றுமில்லை. எனினும் சொன்னவிதம் சிறிது நன்றாகயிருக்கின்றது.
நட்சத்திர வாழ்த்துகள்.
சோகமான இந்த அறிமுகவுரை, முடிவுரையாக இருந்து இனி சந்தோஷம் பெருக வாழ்த்துகள்.
வாழ்வே புனைவா? புனைவே வாழ்வா ? :). நட்சத்திரமாக எழுதவிருக்கும் அன்பு அண்ணனுக்கு வணக்கங்கள், வாழ்த்த வயதில்லை, வணக்கங்கள் :).
சிவராமன் (எ) பைத்தியக்காரனின் அறிமுககுறிப்பின் நடை நன்றாக இருக்கிறது.ஆனால் வயதை இப்படியா போட்டுடைப்பது இல்லை அதுவும் புனைவா:).எதற்கும் பெயருக்கு முன்னால் ஒரு யுவ சேர்த்துக் கொள்ளுங்கள், யுவ பைத்தியக்காரன் என்று சொன்னால் யூத் ஆகிவிடலாம்தானே :).
//உலகத்தில் அனைத்துப்பெண்களும் ஒரே அச்சில் வார்த்து எடுக்கப்பட்ட குளோன்கள் அல்ல.
ஆண்களின் எத்தனை வெரைட்டி இருக்கின்றனவோ, அத்தனை பெண்களிலும் உண்டு.// கொற்கையின் கருத்து சரியானது.
ஜனனமும் மரணமும் நம் கையில் இல்லை.பிணமானவர்களை உள்ளே வைத்து வைத்தியம் பார்ப்பதாய் பணம் பறிக்கும் மருத்துவமனைகளுக்குப் போகாததால் உங்களின் ஒரு சிரமம் குறைந்தது.உங்களின் பதிவு பார்த்து, எத்தனை இருந்தாலும் அலுக்கும்,சலிக்கும் மனநிலை மாறி கடவுளுக்கு நன்றி செலுத்தினேன் சகோதரரே! நண்பரே!
நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணா
பல கலவையான உணர்வுகளை தந்தது உங்களின் இந்தப் பதிவு.
சிதைவுகளால் இம்முறை என் மனச்சேதாரம் அதிகம் :(
நட்சத்திர வாழ்த்துக்கள் :)
நட்சத்திர வாழ்த்துக்கள் சிவராமன்
நட்சத்திர வாழ்த்துகள்!
- இங்கே வாழ்த்த வேண்டுமா என்று புரியாத குழப்பத்துடன் இன்னொரு கொலைகாரன்!
நீர் உண்மையில் பைத்தியக்காரன்.
மனதில் இனம்புரியாத பாரமாக உணர்கிறேன்.
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே !
என்ன சொல்வது...கலவையான உணர்வுகளை தந்தது தங்கள் இடுகை...
நட்சத்திர வாழ்த்துகள்!
நட்சத்திர வாழ்த்துக்கள் :)
நட்சத்திர வாழ்த்துக்கள்.
அண்ணா ஒருநாளைக்கு ஒரு போஸ்ட்தான் போடனும்:)
வாழ்த்துக்கள் அண்ணா!
"வாவ்,சிவராமன் இந்த வாரம் நீங்களா?"என்று தமிழ்மணம் முகப்பில் பார்த்ததும் மனசு துள்ளியது.
அப்படியே அமுக்கி,இறுக்கி விட்டது சிவா,இடுகை.
//நோய் விட்டுப் போயிற்று.
தொடர் சங்கிலியாக இணையும் எங்கள் உரையாடலில் லெளகீக வாழ்க்கை குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டதும், பேசியதும் சொற்பம். அந்தந்த கணங்களை பொறுத்து எதிர்படுபவர்களிடம் அவ்வப்போதைய வாழ்க்கையின் சிரமங்களை பகிர்ந்து கொள்ள முடியும். அப்படியே பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் அது குற்றமாகவோ பிரச்னையாகவோ உருவெடுப்பதில்லை. ஆனால், அனைவரிடமுமே சில விஷயங்கள் மறைவாக சுரக்கின்றன. அவற்றை சரியான தளத்தில் குறியீடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அமையும்போதே குறிஞ்சி, முல்லை, மருத திணைகளும் அக வெளியில் விரிகின்றன.
அப்படியான ஊற்று, பொதுவில் பிரதிகளாக இருவருக்கும் அமைந்துவிட்டது...//
இந்த காலை இவ்வளவு அழுத்தத்துடன் தொடங்கியிருக்கிறது...
வரட்டும் வாங்க மக்கா.
ரணப்படுத்தும் வாழ்வை அதன் போக்கிலேயே பார்க்க,சித்தரிக்க நமக்கு சந்தர்ப்பம் கொடுத்துருக்கே என எடுத்துக் கொள்வோம்.
சித்தரிப்போம்.
வச்சு,வச்சு படிக்கவேண்டிய கட்டுரை இது.
நட்சத்திர வாழ்த்துக்கள் சிவா!
நட்சத்திரவாழ்த்து சொல்ல வந்தேன். ஆனால் அழுத்தமான வாழ்வினை சொல்லி மனதை கனப்படுத்திவிட்டீர்கள். சுந்தரை பார்க்காமலே அவர் மீது மிகுந்த மதிப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை மேலும் அதிகரித்துவிட்டீர்கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள். அதிக பதிவுகள் உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்
நட்சத்திர வாழ்த்துக்கள்
ஏதேது.. உட்டா பொழப்பவிட்டுட்டு உங்க கேங்கல வந்து சேரவெச்சிடுவீங்க போல... ..ஆளவிடுங்க சாமி...
நல்லா எழுதியிருக்குங்க சிவராம் அண்ணா :)
எல்லா கதவுகளும் எப்போதும் அடைபட்டே இருக்காது சிவராமன். கூட்டி கழித்து பார்த்தால் நம் ஆயூளில் இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாகவே பங்கிட்டு அனுபவிக்கிறோம்.நாம் அதை எப்படி உணர்கிறோம் என்பதுதான்.மனதை நெகிழ வைத்த சமர்ப்பணம். இந்த ஏழு நாட்களூம் நிச்சயம் எனக்கு நிறைய கற்று கொடுக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.இன்னொரு தோளும் உண்டு.கலக்கம் வேண்டாம்!!
எழுத்துப் பிழை காரணமாக நீக்க நேர்ந்தது.
உங்கள் அருகில் வந்து, உங்கள் தோள் மீது கைபோட்டுக் கொண்டு நிற்கவேண்டும் என்பது மட்டுமே இந்த நேரத்தில் தோன்றுகிறது.
நெஞ்சம் கனத்தது. உங்கள் இருவரின் நட்பு கண்டு நெகிழ்ந்தேன்... சொல்லலாமா வேண்டாமா குழப்பத்துடன் சொல்கிறேன்...நட்சத்திர வாழ்த்துகள்..!
அன்புள்ள சிவராமன் சார் அவர்களுக்கு,
முதலில் உங்களுக்கு என் நட்சத்திர வாழ்த்துக்கள்.
நான் இதுவரை உங்களிடம் ஒரு 30 நிமிடம் போனில் பேசியிருக்கிறேன். ஒரு மூன்று முறை குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறேன். கடந்த டிசம்பர் 29ம் தேதி இரவு நேரில் பார்த்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறேன். அதில் நாம் பேசியது ஒரு சில வார்த்தைகள் தான். ஆனால் உங்களைப் பற்றி பல நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன். விசயம் தெரியாமலேயே உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என கேட்டிருக்கிறேன். ஆனால், உங்களை சந்தித்தப் பின் உங்கள் வாழ்க்கையில் ஏதோ சோகம் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால், கேட்க நினைத்து கேட்காமலே விட்டு விட்டேன்.
பணம் இல்லாததால் தான் நீங்கள் உங்கள் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லவில்லை. வேறு எந்த காரணமும் இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்படி உங்களின் அப்பாவின் மரணத்திற்கு காரணமாவீர்கள்? நீங்கள் அப்பாவிற்கு எந்த தவறும் செய்து விட வில்லை. சத்தியமாக நீங்கள் உங்கள் அப்பாவை கொலை செய்யவில்லை. பிறக்கும் மனிதர்கள் எல்லோருமே ஒரு நாள் இறக்கத்தான் போகிறார்கள். அவருடைய விதி முடிந்து விட்டது. அதனால் அவர் போய் விட்டார். அதையே நினைத்து வருந்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை.
அடுத்து வாழ்க்கையைப் பற்றி. உங்களுக்கு ஒன்றும் அதிக வயது ஆகிவிட வில்லை. 38 எல்லாம் அதிகம் கிடையாது. இன்னும் நிறைய வருடம் நீங்கள் வாழலாம். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. ஒரு நல்ல ஏழைப் பெண்ணுக்கு நீங்கள் ஏன் வாழ்க்கைத் தரக் கூடாது? யாரோ செய்த தவறுக்கு நீங்கள் ஏன் உங்களை வதைத்துக் கொள்கின்றீர்கள்? குறைந்த பட்சம் உங்கள் அம்மாவின் காலத்திற்குள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, உங்கள் அம்மாவின் மனதை ஏன் நீங்கள் சந்தோசப் படுத்தக் கூடாது?
குருஜியும் நீங்களும் இதே போல என்றும் நட்புடன் இருக்க வாழ்த்துக்கள். குருஜியை சந்திக்காமல் வந்து விட்டேனே? என்று இன்றும் வருத்தமாக உள்ளது.
உங்களுக்கு எந்த நேரத்தில் பண உதவி தேவை என்றாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். எனக்குப் பிடித்த ஒரு எழுத்தாளன் என் கண் முன்னே கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
என்னையும் உங்களின் நலம் விரும்பியாக கருதினால் சந்தோசப் படுவேன்.
அதே தோழமையுடன்,
என். உலகநாதன்
இதையும்
//எல்லா கதவுகளும் எப்போதும் அடைபட்டே இருக்காது சிவராமன்// (நன்றி: தண்டோரா)
இதையும்
//38 வயதில் இவ்வளவு சன்னியாசத்தனமான சிந்தனைகள் தேவையில்லை.
ஒரு பெண் ஒரு உலகமல்ல.// (நன்றி: கொற்கை)
கடுமையாக ரிப்பீட்டுகிறேன்.
அப்படியே நட்சத்திர வாழ்த்திக்கிறேன்..
சிக்கலான நேரங்களில் கூடி வந்த நட்பும், இந்த நட்சத்திர நேரமும் உங்கள் எழுத்தை விரிவுபடுத்துவதற்கு துணைபுரியும் என்று வாழ்த்துக்களுடன்...!!
நட்சத்திரம் ஆனதிற்கு வாழ்த்துக்கள்!காலம்தான் ரணத்திற்கு மருந்து.எல்லாம் கடந்து போகும்.
எளிதில் மீள முடியாத இடுகை.
நட்சத்திர வாழ்த்துக்கள் சிவராமன்.
நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
பணக் கஷ்டங்கள் போய் விடும் நண்பரே. பணம் இன்று வரும் நாளை போகும், நல்ல நண்பர்கள், குணம், உறவுகள், கல்வி இவைதான் சொத்துக்கள்.
பெரும்பாலான இலக்கியவாதிகள், பத்திரிக்கை தொழில் சார்ந்தவர்கள் வறுமையிலேயே இருப்பது ஏன். (பாரதி, கோபி கிருஷ்ணன்...)
Thanks to Sundar (for inspiring you and making you active)
நட் சித்திர வாழ்த்துகள்.
கொஞ்சம் சிதைந்துதான் போனேன். (ஒவ்வொரு பீருக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது)
நட்சத்திர வாழ்த்துக்கள் தல!
சிவராமன்,
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.
நந்தாகுமாரன்,
அன்புடன்.
சுந்தருடனான உங்கள் நட்பு நெகிழ்ச்சியாக வெளிப்பட்டிருக்கிறது.
பொதுவாக இணையமும் அதன் மீதுள்ள கட்டற்ற மோகமும் நவீன எதிர்மறை அடையாளமாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அந்த இணையமும் எழுத்தும் அதன் மூலம் முகிழ்த்த நட்புகளும் உங்களின் தனிமனித சோகங்களையும் பொருளாதார சோதனைகளையும் கடந்து வர உதவியிருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது நவீனத்தின் அத்தனை அடையாளங்களின் மீதும் காரணமின்றி தேவையற்ற வெறுப்பைக் கொள்ளத் தேவையில்லை என்பது புரிகிறது.
அடுத்த பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நண்பருக்கு நட்ச்சத்திர வாழ்த்துக்கள்.
பதிவை படிக்கின்ற போது மனதில் ஒரு இறுக்கத்தையும்,கண்களில் கண்ணீரையும் வரவைத்துவிட்டது.
பகிர்ந்து கொள்ளுங்கள் : துன்பம் பாதியாகும்.
புரிந்து கொள்ளுங்கள் :இன்பம் இரட்டிப்பாகும்.
ஐந்து நாள் முன்னாடிதான் சொந்தவீட்டிலிருந்து(35 வருடங்களாக வாழ்ந்தவீடு-இப்ப போயே போச்சு) வாடகை வீட்டுக்கு போனேன். அந்த கணத்த நொடிகளை மறக்க முயன்று கொண்டிருக்கும்போது உங்கள் இடுகை இரக்கம் காட்டாமல் ரணத்தை கீறி சென்றது. நன்றி! :)
ஜ்யோவ்ராம் சுந்தரை அவன் இவன் என்று பேசி யூத் இல்லை என்று தானாக மாட்டிக்கொண்ட பைத்தியகாரனுக்கு வாழ்த்துகள்.
உங்க இந்த பதிவு எனக்கு சொல்ல முடியாத மனச்சங்கடங்களை தூண்டிடுச்சு :(
வாழ்த்துக்கள்!!!
மீசை இல்லாத நண்பா உனக்கு ரோஷம் அதிகம்டா, ரோஷம் அதிகம்ட அதவிட பாசம் அதிகம்டா
தலைவரே.. நட்சத்திர வாழ்த்துக்கள்.. நிச்சயம் ஒரு வெளிச்சம் வந்தே தீரும். யாரையும், யாரும் விட்டுவிடுவதில்லை..
நட்சத்திர வாழ்த்துக்கள்..
இந்தக் கதை இத்தோடு போதுமே..? மேற்கொண்டும் படிக்க மனமில்லை..!
என்ன சொல்றதுன்னே தெரியலை. வாழ்த்துக்கள்!!
நட்சத்திர வாழ்த்துக்கள்.
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.
நட்சத்திர வாழ்த்துக்கள்
//அம்மாவையும் கொலை செய்யப் போகிறேனா என்ற கேள்விக்கு அகப்பரப்பில் கிடைக்கும் விடையை மட்டும் 'வாசிக்க' இப்போதைக்கு துணிவில்லை. //
நிச்சயம் இந்நிலை வராது.வரக்கூடாது.
கொற்கையின் கருத்து மிக சரி; உலகநாதன் எழுத்தும் நெகிழ்த்தியது
சொல்லத்தெரியாத உணவுகள்....
நட்ச்த்திர வாழ்த்துக்கள்..
இதுவும் கடந்து போகும் சிவராமன் சார்
மனசு பாரமாயிடுச்சி. ஆனா, இப்படில்லாம் சொல்றத நீங்க விரும்பமாட்டீங்க.
ஒன்னே ஒன்னு சொல்லனும்னு தோனுது. உரையாடல், கோபிகிருஷ்ணன் புத்தகங்கள், கிழக்கில் எங்களுக்கு ஓசி சிகரெட் , படச் செலவுகள்,...என்பது போன்ற செலவுகளை நிறுத்திக்கொள்ளுங்கள்.
இவ்வளவு நல்லவராக இருக்கிறதுக்கு இப்போ சூழல், உங்களுக்கு சரியாயில்லை.
மற்றவர்களிடம் செலவை விட்டுவிடுங்கள், என்னையும் சேர்த்துக்கொள்ளலாம்.
//அம்மாவுக்கான தீச்சட்டியை தயாரிக்கும்படி எங்கோ இருக்கும் களிமண் நிர்பந்தித்துக் கொண்டே இருக்கிறது. //
ம்ம்ம். முகம் பார்க்கும் கண்ணாடியாக சில சமயம் உங்கள் எழுத்து மாறிவிடுகிறது.
நட்சத்திர வாழ்த்துகள் அண்ணா.
சில வரிகளை கடப்பதற்கே சில நிமிடங்கள் பிடித்தது.வலியால்.நெகிழ்ச்சியால்.
கனத்துப்போய் இருக்கிறது இதயம்.
அவரவர் உலகம் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது.
அன்பின் சிவராமன்..
காலையில் வாசித்த இடுகை, ஒரு நாள் முழுதும் மனதில் பாரமாய் அழுத்திக்கொண்டே இருப்பது இதுவே முதல்முறை. கலவையான உணர்வுகளுடன் நட்சத்திர வாழ்த்துக்கள்.
பெருசுங்க இரண்டு பேர் இப்படி நட்பு பாராட்டுவது யூத்துகளுக்கு மிகவும் உதவும்.
நீங்க ஜ்யோவை இப்படி ஹைஜாக் செய்வது சிஷ்யகோடிகளுக்கு வருத்தமாக இருக்கும். அவர் எல்லோருக்கும் சொந்தம்.
தனிப்பட்ட துயரைப் பொதுவில் பகிர்வதற்கும் ஒரு மனநிலை வேண்டும். அதை இப்படி இலக்கிய நயத்துடன் சொல்ல தனி ஆளுமை வேண்டும். சிவா, we all love you man.
அனுஜன்யா
நட்சத்திர வாழ்த்துக்கள்.
கண்ணீரோடு படித்தேன். சுந்தரும் என்னை பதிவுலகில் எழுத தூண்டியவர். ஈமெயில் மூலம் தொடர்பு. என் பதிவுலக வாத்தியார் அவர். வேலை, சில பிரச்சனை காரணமாக தொலை தொடர்பு.... நேரில் பேச காலம் வரும். சந்திப்பேன்!
உங்கள் மனம் திடம் செய்யுங்கள்.
நடக்க வேண்டியது நடக்கும்.
மனதை மிகவும் பாதித்த இடுகை. நீங்கள் குறிப்பிட்டதைப் போல உலகின் ஒவ்வொரு சந்துகளிலும், பொந்துகளிலும் மனிதர்கள் வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பாராட்டிய நட்பு போற்றத்தக்கது. உங்களை நீங்களே குற்ற உணர்வில் ஆட்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
அண்ணே படிக்க படிக்க மனசு ரெம்ப கனம் ஆயிகிட்டே இருந்தது .. முழுசா படிக்க முடியல..
நட்சத்திர வாழ்த்துக்கள் ..
சிவா,
படிக்கும் போது மிக வருத்தமாக இருந்தது.
மறுமணம் உங்களுக்கு அமைந்து, எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. எமது பிராத்தனைகள்.
ஒரு விசியம் தான் நெருடுகிறது. கஸ்டமான சூழ்னிலையில் பொறியல் படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, பின் என்ன நினைப்பில், தமிழக பத்திரிக்கை உலகம் என்ற சாக்கடையில் குதித்தீர்கள் ? வருமானம் குறைவு மட்டுமன்றி, professional ethics மிக மிக குறைவான துறை. பல கேவலமான விசியங்களுக்கு துணை போக வேண்டும். என்ன புலிச்சர் பரிசையா வெல்ல முடியும் ?
தம்பி அதிஷாவும் இதே போல் பாதை மாற்றியிருக்கிறார். முன்பே தெரிந்திருந்தால் தடுக்க முனைந்திருப்பேன். too late. ஹூம்..
நட்சத்திர வாழ்த்துக்கள்!
உங்கள் நட்பு நெகிழ வைக்கிறது!
உங்கள் வலைப்பூவில் இருக்கும் படம் யாருடையது? ஏதோ, அமெரிக்க அல்லது ஐரோப்பிய எழுத்தாளரைப்போலிருக்கிறது?
அப்படத்துக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
அண்ணா உங்கள பத்தி கொஞ்ச கொஞ்சம் தான் எனக்கு தெரியும், அதுவும் நானா சில சமயங்கள் ல அப்படியான விஷயங்களை கேட்டுட்டு ஏன் இதை கேட்டு உங்களை கஷ்டப்படுத்திட்டோம் னு நினச்சிருக்கன். நீங்களா உங்க பர்சனல் விஷயங்கள அவ்ளவா பேசி கேட்டதில்ல, நீங்க இப்டி பேசறத கேக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, என்ன சொல்றதுனு கூட தெரியல இங்க, இப்படியான பர்சனல் விஷயங்களை எழுதும் போதும் எழுதறதுககு முன்னாடியும் இருக்கற மனநிலை எப்படியானது என்பதை நானும் நன்றாக உணர்வேன். சுந்தர் சாரையும் உங்களையும் உங்கள் இருவரின் நட்பைப் பற்றியும் எனக்கு ஓரளவிற்கு தெரியும், நேரிலும் அந்த நட்பை அணுக்கத்தை இணக்கத்தை கண்டு உணர்ந்திருக்கிறேன். சுந்தரிடம் மட்டுமல்ல நான் பார்த்து நேரில் எல்லாரிடமும் மிகுந்த அன்போடும் நெகிழ்ச்சியோடும் பழகும் இனிமை நிரம்பியவ்ர் நீங்கள். ஒவ்வொரு முறை சந்திப்பின் போதும் உங்களை ஆரத்தழுவி முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் போது அந்த ஜீவ ஊற்றாய் நிரம்பி வழியும் அன்பின் கணங்களில் கண்களும் மனமும் அடைந்த கசிதலான நெகிழ்ச்சியான தருணங்கள் எப்போதும் மனதில் இருக்கும். யாரையும் கொலை செய்யும் மனமுடையவரல்ல நீங்கள், இருந்தும் மனம் இப்படியான குற்றவுணர்வுகளிலிருந்து மீள முடியாமல் தவிப்பது தவிர்க்க முடியாமலாகிவிடுகிறது.
இந்த வாழக்கை ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வியை நானும் அடிக்கடி எனக்குள் கேட்டுப் பார்த்திருக்கிறேன் பலமுறை.
ஆனால் இதை எழுதி முடித்தவுடன், எழுதுவதற்கு முந்தைய கணத்தின் இறுக்கம் சற்றே தளர்ந்திருக்கும் என தோன்றுகிறது, இப்போதைக்கு உங்களுக்கு என் அன்பு முத்தங்கள் ண்ணா
இந்த எழுத்துக்குப் பின்னிருக்கும் மனதுக்குச் சொந்தக்காரன் நிச்சயம் பைத்தியக்காரனாக இருக்க முடியாது. பாசக்காரன். அதற்கு என் வந்தனம்.
வாழ்த்துக்கள்..!
நல்லெழுத்து ஒன்றை அறிமுகப்படுத்திய தமிழ்மணத்துக்கு நன்றி..! இன்றைக்கு தூக்கம் யோசித்துதான் வரும்... :)
ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை அடைய முடியும் என்று சொல்லுவார்கள். உங்களுடைய இந்த துயரங்கள், நெகிழக் கூடிய பல நட்பு உள்ளங்களை உங்களுக்கு தந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் துணை நிற்க பிரார்த்திக்கின்றேன்.
நெகிழ்ச்சியான பதிவு. நட்சித்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்.
நெகிழ்ச்சியான பதிவு...
நல்ல நட்பை உணர்ந்தவர்களால் மட்டுமே இனோருவரின் நட்பையும் உணர முடியும்.
இல்லாதவர்களால் அது வெறும் வெட்டிக் கும்பல் என்றே பார்க்கப்படும்...
நானும் நல்ல நட்பை உணர்ந்திருக்கிறேன்...
தனிப்பட்ட உங்கள் தடைகளை தாண்ட நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெல்லட்டும்
வாழ்த்துக்கள்.
நண்பர் ஆடுமாடின் கீழ்கண்ட வாசகங்களை வழிமொழிகிறேன்.
//ஒவ்வொரு பீருக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது//
வாழ்க்கையை புனைவாக மாற்றுவது எழுத்து என்றால், புனைவை வாழ்க்கையாக மாற்றுவது வாசிப்பு எனலாம். வாழ்க்கையும் புனைவையும் வைத்து விளையாடுவது எழுத்தும்-வாசிப்பும் என்கிற மற்றொரு மொழிவிளையாட்டுத்தான். எதார்த்தத்தையும் புனைவையும் வேறுபடுத்துவது சொல்லுதல் முறைகள்தான். அந்த முறை இந்த எழுத்தில் நன்றாக வெளிப்பட்டுள்ளது.
மீண்டும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜமாலன்.
அது என்ன நட்சத்திர வாழ்த்து புரியவில்லை. இந்தக் கணிணிக் கலை-அதர் திறந்தும் திறக்காமலும் வைத்திருக்கும் பேருலகைப் புரிந்துகொள்ளும் திறனும் எனக்கில்லை. ஆனால் 'நட்சத்திரம்' என்னும் சொல் என்னை மிரட்டுகிறது.
கவிஞருக்கு சமர்ப்பித்த உங்கள் எழுத்தைப் புனைவு என்றுதான் வாசித்துக்கொண்டு வந்தேன். கூடவே, கவிஞர் சற்றிப்போது எழுதிய 'நச்சென்று கதை...' இலக்கணத்தை ஒட்டி உங்கள் எழுத்து உருவாகி வருகிறதா என்றும் கருதுநோடிக்கொண்டு வந்தேன். ஆகவே, 'மேலே எழுதப்பட்ட தனிப்பட்ட வாழ்க்கை என்ற புனைவையே எடுத்துக் கொள்வோம்...' என்கிற வாக்கியம் வந்தபோது, இதற்கு மேல் இதை இவர் எழுதியிருக்கக் கூடாது; ஜ்யோவ்ராம்சுந்தரை எழுத்தித்தரச் செய்து சேர்த்திருக்க வேண்டும் அல்லது அவர் எழுதியது போல இவரே எழுதி இட்டிருக்க வேண்டும் என்று எனக்குள் கணித்து மேற்சென்றேன். ஆனால் பாருங்கள் அசல் வாழ்க்கை புனைவிலும் இடக்குமுடக்கானது என்பதில் என் சகோதரனாக வந்து சேர்ந்த்திருக்கிறீர்கள்! வாழ்த்துகள்.
நட்சத்திரங்களுக்கும் மேல் நம்மை அது உயர்த்தி எடுத்திருக்கிறது. நெஞ்செலும்பை வகுந்து ஈரற்குலை தேடும் கைப்பரிதவிப்புகளுக்கு மேலும் மேலும் பங்குபோட்டுக் கொடுக்க இதயங்களைப் படைக்கமுடியும் நம்மால்.
மூன்று நாட்களுக்கு முன் ஒரு மணவிழாவில், "இப்படி இருக்கீகளே, முடியாதப்போ தண்ணி வெந்நி வச்சுக் குடுக்குறதுக்கு..?" என்று இழுத்தார் ஒரு பழைய அறிமுகம். அவருக்குப் பிரமிளைத் தெரியாது என்பதால் நான் ஒன்றும் பேசவில்லை.
உங்கள் எழுத்துநடை வரித்தெடுக்கும் உணர்வுத் துல்லியம் இப்போது புரிகிறது. இந்தப் புனைவு வாழ்க்கையும் இடக்குமுடக்காவது இதன் அடிப்படைத் தேவை, ஆமாம்.
அசராதிருப்போம்.
- ராஜசுந்தரராஜன்
//K.R.அதியமான் said...
சிவா,
படிக்கும் போது மிக வருத்தமாக இருந்தது.
மறுமணம் உங்களுக்கு அமைந்து, எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. எமது பிராத்தனைகள்.
ஒரு விசியம் தான் நெருடுகிறது. கஸ்டமான சூழ்னிலையில் பொறியல் படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, பின் என்ன நினைப்பில், தமிழக பத்திரிக்கை உலகம் என்ற சாக்கடையில் குதித்தீர்கள் ? வருமானம் குறைவு மட்டுமன்றி, professional ethics மிக மிக குறைவான துறை. பல கேவலமான விசியங்களுக்கு துணை போக வேண்டும். என்ன புலிச்சர் பரிசையா வெல்ல முடியும் ?
தம்பி அதிஷாவும் இதே போல் பாதை மாற்றியிருக்கிறார். முன்பே தெரிந்திருந்தால் தடுக்க முனைந்திருப்பேன். too late. ஹூம்..// பலர் இதுபோன்று இடம் மாறி இருக்கிறார்கள் அதியமான் சார். ஏதோ ஒருவித ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எம்.பி.ஏ படித்த மணிரத்னம் என்றால் எத்தனை பேருக்குத் தெரியும்? சினிமா இயக்குநர் மணிரத்னம் என்றால் பலருக்குத் தெரியும். எழுத்துதனை பொழுதுபோக்காக வைத்துக்கொள்வோர் உண்டு, எழுத்தே வாழ்க்கையென ஆகிப்போவோரும் உண்டு. நீங்கள் தடுக்க நினைத்திருந்தாலும், இவர்களால் தங்களைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது.
இத்தனை மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை தந்த எழுத்துக்கள், பொதுவில் படைக்க நினைத்த நெஞ்சம் என்பது மாவீரன் கொண்ட துணிச்சல் தான்.
எவரையும் புரட்டி போட்டுவிடும் ஆளுமை கொண்ட வார்த்தைகளும், இதனை கொண்டு வந்த நட்சத்திரத்திற்கும் வாழ்த்துகள்.
தேவியர் இல்லம் திருப்பூர்
நட்சத்திர வார வாழ்த்துக்கள்
--
இந்த வாரம் ஆரம்பத்திலேயே உங்களுக்கு மனநிம்மதி அளிக்கும் செய்தியை கூற எனக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி
--
கூடிய விரைவில் மற்றொரு நல்ல செய்தியும் வரும்
பொருத்தமில்லா மனைவியும் அவளை பிரிந்து படும் சுக நரக வேதைனகளும் நானும் அறிவேன்.
இதனால் உறவுகள் அனைத்தும் இழந்து தனிமரமாக நான் விடப்பட்ட போது வலையுலகம் தான் பெரும் ஆறுதலாக இருந்தது.
இந்த பதிவின் ஆழம் அழுத்தம் புரிகிறது நண்பரே.
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அன்ணா.மாற்றம் மட்டுமே நிலையானது.காலங்களும்,காட்சிகளும் மாறும்.கலங்காதீர்கள்.
' '
அறிமுகம் நன்றாக இருந்தது.
எழுத்தின் மீதான தீராக் காதல் வெளிப்படுத்திய வார்த்தைகளில்தான் அவ்வளவு நேர்த்தி இருக்க முடியும்.
{கண்களில் சந்தோஷம் வழிய அதை பார்த்தேன். ஒருவருக்கும் சந்தேகம் வரவில்லை. மகிழ்ச்சியை தவிர். காவல்துறையினர் வருவார்கள். }
புனைவின் வடிவத்துக்காக இந்த வார்த்தைகள் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது;அப்பா இறப்பதை,கையில் காசில்லை என்ற ஒரு அவலத்தில் ஏதும் செய்ய இயலவில்லை என்ற நிலைக்காக மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது ஒரு புறமிருக்க, சந்தோஷம் வழிய எவரும் அப்பனின் இறப்பைப் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை-அதுவும் ஏதும் செய்ய இயலாத இயலாமையில் இருக்கும் போது !
இரண்டும்-அதாவது இயலாமை அவலமும்,மகிழ்வும் ஒன்றுக்கொன்று முரணானவை.
எழுத்துச் சுவைக்காக என்றால் கூட என்னால் அந்தப் பத்தியை ஒத்துக் கொள்ள முடியவில்லை,மன்னிக்கவும்.
இரண்டாவதாக வலைப்பதிவுகளில் உங்களைப் போன்ற தேர்ந்த எழுத்தர்களும்' சுயபிதற்றலுக்குள் செல்வதும் ஏற்க இயலாததாக இருக்கிறது.
நமக்கான ரணங்கள் நமக்கானவை;அவற்றைப் பொதுவில் பரப்புவதும் கூட,ஏனோ ரசிக்கும்படியாக இருப்பதில்லை.(அனைவருக்குள்ளும் ரணங்கள் உண்டு!)
மீண்டும் மன்னிக்கவும்.
மற்றபடி ஒரு நல்ல வாசிப்பனுபவம் ஒரு வாரத்திற்கு கிடைக்கலாம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நட்சத்திர வாழ்த்துகள்!
அன்பின் சிவராமன், வெளீயூர் பயணம் முடித்து நேற்று தான் சென்னை திரும்பினேன். நட்சத்திர வாழ்த்துகள்.
பல முறை பல மகிழ்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் உங்களுக்கே ஏற்பட்ட மகிழ்ச்சியாக குதுகலிப்பதும் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் பார்த்து வியந்தும் இருக்கிறேன்.
உங்கள் எழுத்து எப்போதும் போல எனக்கு பிரமிப்பு தான்.
ஆனால் இந்த முறை சற்றே நட்பின் மகிழ்ச்சியும் அதீத நெகிழ்ச்சியுமாய் வார்த்தைகளின்றி தவிக்க வைத்து விட்டது.
அன்புள்ள சிவராமன் சார் அவர்களுக்கு,
"கழிவறைகளில் நிம்மதியை தேடிக் கொள்கிறேன்"
மனதில் இனம்புரியாத பாரமாக உணர்கிறேன்
உங்கள் எழுத்து எப்போதும் போல எனக்கு பிரமிப்பு தான்.
தனிப்பட்ட உங்கள் தடைகளை தாண்ட நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெல்லட்டும்
இதுவும் கடந்து போகும் சிவராமன் சார்
அன்புள்ள சிவராமன் சார் அவர்களுக்கு,
"கழிவறைகளில் நிம்மதியை தேடிக் கொள்கிறேன்"
மனதில் இனம்புரியாத பாரமாக உணர்கிறேன்
உங்கள் எழுத்து எப்போதும் போல எனக்கு பிரமிப்பு தான்.
தனிப்பட்ட உங்கள் தடைகளை தாண்ட நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெல்லட்டும்
இதுவும் கடந்து போகும் சிவராமன் சார்
அடுத்து எப்போது இந்தியா வந்தாலும் நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.
அண்ணா, கொஞ்சம் ‘லேட்டான’ வாழ்த்துகள்!
நான் சந்தித்த பலருக்கும் வாழ்வில் இப்படி ஒரு பக்கம் இருக்கிறது..
அதே போல் ஒரு நல்ல நட்பும்..
வாழ்க வளமுடன்..
சிதைவுகள் , சிதைந்து கொண்டிருப்பவன் என்பதே நன்றாக இல்லை..பெஸிமிஸ்டிக் ஆ இருக்கு
மாற்றிக்கொள்ளுங்கள்...உற்சகம் பெறும்..
நம் வாழ்வு மட்டுமல்ல நம் எழுத்தும் பலருக்கு ஊக்கம் , உற்சாகம் தரட்டும்.
உலகநாதன் சார் சொன்னவை
நீங்கள் பரிசீலனை செய்யலாம்
நட்சத்திர வாழ்த்துக்கள்.
அன்புள்ள பைத்தியக்காரனுக்கு,
பதிவு என்னை நெகிழ வைத்து விட்டது.
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.
மனம் கனக்க வைத்து விட்டீர்கள். :(
அன்புள்ள பைத்தியக்காரன், (இப்போது இப்படிக் கூப்பிடுவதில் தயக்கமில்லை)
நெகிழவைத்துவிட்டீர்கள் என்பது உணர்ந்த உணர்வுக்குக் குறைவான வார்த்தை. நீங்கள் அருமையான கதைசொல்லி. துயரங்கள் என்று சொல்லப்படுபவற்றை எள்ளல் கலந்து எழுதிச்செல்லும் உங்கள் எழுத்துநடைக்கு நான் தீவிர வாசகி. இனி உங்களைப் பார்க்கும் பார்வையில் இன்னும் மரியாதை கூடியிருக்கும். கொஞ்சமேனும் உங்கள் சுமையை இறக்கமுடியுமா என்று யோசிக்கவைத்திருக்கிறீர்கள்.
அன்புள்ள பைத்தியக்காரன்/சிவராமன்,
தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
//
ஒரு நல்ல ஏழைப் பெண்ணுக்கு நீங்கள் ஏன் வாழ்க்கைத் தரக் கூடாது
//
அதென்ன "வாழ்க்கை" தருவது? எந்தப் பெண்ணாவது "மனைவியை இழந்த அவனுக்கு நான் வாழ்க்கை தரப் போகிறேன்" என்று எழுதுகிறாளா/பேசுகிறாளா?
ரொம்ப சோகமா இருக்கேன்னு பின்னூட்டங்களைப் படிச்சிட்டு வரும்போது, ஜோ அமலன் சிரிக்க வைச்சிட்டார்! ;-)
இதயம் கனத்து பலத்த சப்தத்துடன் எங்கோ உருண்டு ஓடுகிறது...
இந்த நட்புகள் கிடைத்ததில் மிகுந்த நெகிழ்ச்சி.
மணம்புரிந்து வாழ்வை தொடர அன்புத் தம்பியின் வாழ்த்துகள்.
Post a Comment